
ரஜினியின் சுல்தான்! 'சிவாஜி' படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில், ரஜினியின் 'சுல்தான்' படத்தை 1,200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள்.உலக அளவில் வசூலில் பல சாதனைகள் படைத்த சிவாஜிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் 'சுல்தான்–தி வாரியர்'. இந்தியாவை ஆட்சி செய்த சுல்தானாக இதில் நடிக்கிறார் ரஜினி. வரலாற்றுப் படம் என்பதால் சுல்தானை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கி வருகிறார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பெல்ஜியம், பிரேஸில், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆறு வாரங்கள் நடந்தது. முதலில் ரஜினியை நடிக்க வைத்து பின்னர், அந்தக் காட்சிகளை அனிமேஷனுக்கு மாற்றும் வேலைகள் இதுவரை செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவில் நடந்தன.இப்போது, படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார் செளந்தர்யா. இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த ரஜினி, மிகுந்த உற்சாகத்துடன் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.இதுகுறித்து செளந்தர்யா கூறுகையில், இதுவரை எடுத்துள்ள பகுதிகளைப் பார்த்து அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே என்னை மிகவும் உற்சாகப்படுத்தி வருபவர் அப்பாதான். அப்பாவை இன்னும் இளமையாக, புதிய ஸ்டைலில் இந்தப் படத்தில் பார்க்கலாம்.ஏற்கெனவே வெளியிடப்பட்ட சுல்தான் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதே வரவேற்பு படத்துக்கும் கிடைக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் ஒருவரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் முதல் முழு நீள அனிமேஷன் படம் சுல்தான்தான்.இப்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறோம். அப்பா இதற்காக 20 நாட்கள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். இந்த முறை படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில்தான் என்றார்.ஏவி.எம் மற்றும் பிரசாத் ஸ்டுடியோக்களில் இந்தப் படத்துக்காக பிரமாண்ட செட்கள் போடப்பட்டுள்ளன. க்ளைமாக்ஸில் ரஜினி பங்கேற்கும் போர்க்களக் காட்சிகளை லார்டு ஆஃப் த ரிங்ஸ்க்கு இணையாக அனிமேஷன் செய்யப் போகிறாராம் செளந்தர்யா.ஏற்கெனவே இந்தப் படத்துக்காக ஆறு பாடல்கள் போட்டுக் கொடுத்துவிட்டார் ரஹ்மான். ரஜினிக்கென்று ஸ்பெஷல் அறிமுகப் பாடலும் இதில் உண்டு.தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் செளந்தர்யா. சிவாஜியை மிஞ்சும் வகையில் உலகமெங்கும் ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் இப்போதே சுல்தான் டிரெய்லர் காட்டப்படுகிறது. இதைவிட அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.
|