
கோவாவில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் பேசிய இயக்குனர் மணிரத்னம், மக்களுக்காகவே படம் இயக்குகிறேன் என்றார். மணிரத்னம் என்றதும் அவர் படத்தில் இடம் பெறும் தொழில்நுட்பமே முதலில் நினைவு வரும். சர்வதேச படவிழாவில் மணிரத்னம் பேசியது இதற்கு நேர் எதிர்மறையாக இருந்தது. கதையும், கதை சொல்லும் விதமும் சினிமாவில் முக்கியம் என்றார் அவர். வெறும் தொழில்நுட்பத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்றவர், நடிகர்களைவிட கதையே முக்கியம் என்றார். "நல்ல கதை அமைந்தாலும் அதை சிறப்பாக வெளிப்படுத்த திறமையுள்ள நடிகர்கள் தேவை. எனது 'உயிரே', 'இதயத்தை திருடாதே' நல்ல கதைதான் என்றாலும் இந்தியில் வெற்றி பெறவில்லை. இதற்கு கிளைமாக்ஸ் திருப்திகரமாக அமையாததே காரணம். இரண்டே கால் மணி நேரம் பார்வையாளர்களை திருப்திப்படுத்தினாலும் கடைசி 15 நிமிஷ கிளைமாக்ஸ் சரியில்லை என்றாலும் படம் ஒடாது" என்றார். விருது குறித்து பேசும் போது, ஆஸ்கார் முதற்கொண்டு எந்த விருதாலும் பயனில்லை என்றவர், நான் விருதுக்காக படம் எடுப்பதில்லை, மக்களுக்காகவே படம் இயக்குகிறேன் என்றார்.
|