
தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் படுகொலைகளை நிறுத்தக் கோரியும், வாகரை படுகொலையைக் கண்டித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் படுகொலையைக் கண்டித்தும் சுவிஸ் ஜெனீவா நகரில் நேற்று புதன்கிழமை மாபெரும் கண்டன ஆர்பாட்டப் பேரணி நடைபெற்றது. அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு நடைபெற்ற இந்தப் பேரணி, ஜெனீவா தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி ஜெனீவா மனித உரிமை மன்ற, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற காரியாலயம் வரை சென்றது.சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவிஸ் வாழ் தமிழர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.கடுமையான குளிரின் மத்தியிலும் சிறுவர்களும், குழந்தைகளுடன் தாய்மாரும் தீப்பந்தங்களைச் சுமந்தபடி பங்கேற்றிருந்த இக்கண்டன ஆர்பாட்டப் பேரணி, மிகவும் உணர்ச்சிகரமாகவும் சுவிஸ் மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பேரணியியின் நிறைவில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது. |